இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கொள்வோம்... பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா!

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கொள்வோம்... பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா!

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், செப்டம்பர் 25ஆம் தேதி துபாயில் நடைபெற்ற முக்கியமான போட்டியில், வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 135/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால், பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே 49/5 எனத் திணறியது. இதனால், அந்த அணி 100 ரன்களைத் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், லோயர் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட முஹம்மது ஹாரிஸ் 31 ரன்களும், முகமது நவாஸ் 25 ரன்களும், சாகின் அப்ரிடி 19 ரன்களும், ஃபஹீம் அசரப் ஆட்டமிழக்காமல் 14* ரன்களும் எடுத்து பாகிஸ்தானின் மானத்தை ஓரளவுக்குக் காப்பாற்றினர். வங்கதேசத் தரப்பில், தஸ்கின் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து விளையாடிய வங்கதேசம், அதை விட மோசமாக பேட்டிங் செய்து, 20 ஓவரில் 124/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, ஹரிஸ் ரவூப் 3, மற்றும் சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். வீட்டுக்கு கிளம்பிய வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக சமீம் ஹொசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.

49/5 என சரிந்த பின்னரும் வெற்றி பெற்ற தற்போதைய பாகிஸ்தான் அணி ஸ்பெஷலான திறமைக் கொண்டது என்று கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். இது போன்ற போட்டிகளை வென்றதாலேயே தாங்கள் நிச்சயம் ஒரு ஸ்பெஷல் அணியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இப்போட்டியைப் போல பவுலிங் செய்தால், இறுதிப் போட்டியில் தங்களால் இந்தியாவை எளிதாக வீழ்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இப்போதும் தாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்தோம், இருப்பினும் பந்து வீசிய விதத்தை வைத்து அழுத்தத்தை உருவாக்குவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, புதிய பந்தில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம்.

ஸ்பெஷல் பிளேயரான ஷாஹீன் அப்ரிடி அணிக்குத் தேவைப்பட்டதைச் செய்தார் என்றும், அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கேப்டன் குறிப்பிட்டார். பேட்டிங் துறையில் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படுகிறது, அதற்காக வேலை செய்வோம் என்று சல்மான் ஆகா தெரிவித்தார்.

தாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக பயிற்சியாளர் ஷேன் கடுமையாக உழைத்து வருவதாகவும், கூடுதல் பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறினார். ஃபீல்டிங் செய்ய முடியாவிட்டால் அணியில் இருக்க முடியாது என்று மைக் ஹெசன் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

“நாங்கள் செட்டிலாகியுள்ளோம். நாங்கள் எந்த அணியையும் தோற்கடிக்க போதுமானவர்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை கம்பேக் கொடுத்து இறுதிப் போட்டியில் அவர்களை (இந்தியாவை) தோற்கடிப்பதற்காக நாங்கள் உற்சாகத்துடன் உள்ளோம்,” என்று அவர் கூறினார்.