இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்.. பிசிசிஐ அதிரடி முடிவு!
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 தொடர் இலங்கையில் நடைபெறும். ஆனால், அது இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், இந்தத் தொடர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுக்கு வரும்.
அதனையடுத்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ள ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் விரைவில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் இந்திய அணிவிளையாடுவதாக இருந்தது. திடீரென அந்த இருதரப்புத் தொடர் 2026 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் அமைப்பு என்பன அண்மையில் அறிக்கை வெளியிட்டு இருந்தன. தற்போது வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை, இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஏற்றதாக இல்லை என பிசிசிஐ கருதியதால் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் இலங்கை அணியுடனான போட்டியை நடத்துவது தொடர்பில் பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 தொடர் இலங்கையில் நடைபெறும். ஆனால், அது இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இருநாட்டு கிரிக்கெட் அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்துள்ளன.
அதன்படி, இந்திய அணி மற்றும் இலங்கை அணி ஆகஸ்ட் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடக்கூடும்.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்திற்கும் நான்காவது வாரத்திற்கும் இடையே இந்த ஆறு போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகின்றது.