8ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... 31 வருட வரலாறை காப்பாற்றிய ரோஹித் அணி
1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரை ஏழு முறை உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கின்றன.
1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரை ஏழு முறை உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கின்றன.
அதில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. தற்போது எட்டாவது முறையாக நடந்த உலகக்கோப்பை மோதலில் பாகிஸ்தான் அணி தன் மோசமான சாதனையை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
அதே போல, இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என நம்பினர். அதை செய்து காட்டி இருக்கிறது தற்போதைய இந்திய அணி.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்கள்; மட்டுமே இழந்து இருந்தது. ஆனால், அடுத்த 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 50, ரிஸ்வான் 49 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்கள் ஆகும். துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 36, அப்துல்லா ஷபிக் 20 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்களில் 12 ரன்கள் எடுத்த ஹசன் அலி தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய பவுலர்கள் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜடேஜா, ஹர்திக்பாண்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக ரன் கொடுத்ததும், சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தியதுமே பாகிஸ்தான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
இந்திய அணிக்கு பாகிஸ்தான் 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. காய்ச்சலில் இருந்து அணிக்கு திரும்பிய சுப்மன் கில் துவக்க வீரராக இறங்கி 4 ஃபோர் அடித்து 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி 16 ரன்கள் சேர்த்து அவரும் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.
ஆனால், ரோஹித் சர்மா அடித்து ஆடி மிரட்டினார். சிக்ஸராக அடித்து தள்ளி அரைசதம் கடந்த அவர் அதன் பின்னும் அதிரடியை தொடர்ந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து ஆடினார். பின் ரோஹித் சர்மா 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதான ஆட்டம் ஆடி வெற்றியை உறுதி செய்தது. இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டாவது முறையாக ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |