11 பந்துகளில் 6 விக்கெட்டுகள்... கண்மூடி திறப்பதற்குள் காலியான இந்தியா... நடந்தது என்ன?
ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 55 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியது.
சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி களமிறங்கியது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோகித் சர்மா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சுப்மன் கில் 36 ரன்களில் வெளியேறினர்.
பின்னர் விராட் கோலி பேட்டிங் செய்ய, மறுமுனையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் வந்த கேஎல் ராகுல், விராட் கோலி ரன்கள் சேர்க்க ஏதுவாக நின்றார். 150 ரன்களை கடந்த நிலையில், லுங்கி இங்கிடி வீசிய ஓவரில் கேஎல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஜடேஜா மற்றும் பும்ரா இருவரும் இங்கிடி வீசிய ஒரே ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணி 153 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் அடுத்த ஓவரை வீச ரபாடா வந்தார்.
அந்த ஓவரின் 2வது பந்தில் விராட் கோலி 46 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் 4வது பந்தில் சிராஜ் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணா அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 11 பந்துகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை ரன்களே எடுக்காமல் இழந்ததுடன், இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |