போட்டி முடிந்ததுமே இங்கிலாந்து - இந்திய வீரர்கள் செய்த செயல்... நெகிழ வைத்த சம்பவம்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் ஆடுகளத்தில் அனல் தெறிக்க மோதிக்கொண்ட வீரர்கள், போட்டி முடிந்ததும் தோளில் கைபோட்டு நட்பைப் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போட்டி முடிந்ததுமே இங்கிலாந்து - இந்திய வீரர்கள் செய்த செயல்... நெகிழ வைத்த சம்பவம்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் ஆடுகளத்தில் அனல் தெறிக்க மோதிக்கொண்ட வீரர்கள், போட்டி முடிந்ததும் தோளில் கைபோட்டு நட்பைப் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்த தொடரின் கடைசி போட்டியான ஓவல் டெஸ்டின் நாயகன் முகமது சிராஜ்-ஐ, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் கட்டித்தழுவி பாராட்டிய காட்சி, நெகிழ வைப்பதாக இருந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் தொடர், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடியதால் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகவே இருந்தது. 

லார்ட்ஸ் மைதானத்தில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜாக் கிராலி இடையேயான வாக்குவாதம், முகமது சிராஜ் மற்றும் பென் டக்கெட் இடையேயான மோதல் எனப் பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, மூன்றாவது டெஸ்டின் போது, இங்கிலாந்தின் 'பேஸ்பால்' அணுகுமுறையை கிண்டலடிக்கும் விதமாக சிராஜ், ஜோ ரூட்-டிடம், பேஸ்பால் ஆடுங்கள், நான் பார்க்க வேண்டும்" என்று ஸ்லெட்ஜிங் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

மற்றொரு சம்பவத்தில், பென் டக்கெட்-டை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, இந்திய வீரர் ஆகாஷ் தீப், அவரை தோளில் தட்டி வழியனுப்பியது சர்ச்சையை கிளப்பியது. இப்படித் தொடர் முழுவதும் அவ்வப்போது வீரர்கள் இடையே உரசல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன.

ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இந்தத் தொடரின் கிளைமேக்ஸாக அமைந்தது. 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி நாளில் களமிறங்கிய இங்கிலாந்தை, தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு சரித்திர வெற்றியைத் தேடித் தந்தார் சிராஜ்.

போட்டி முடிந்ததும், இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பாராட்டுகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது, இந்தத் தொடர் முழுவதும் சிராஜுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்த பென் டக்கெட், அவரிடம் சென்று மனதாரப் பாராட்டி கட்டித்தழுவிக் கொண்டார். 

அந்தப் போட்டியில் விளையாடாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மைதானத்திற்குள் வந்து, இந்திய வீரர்களின் போராட்ட குணத்தையும், குறிப்பாக சிராஜின் அசாத்திய திறமையையும் பாராட்டி அவரையும் கட்டித்தழுவினார்.

இந்தக் காட்சி, களத்தில் நிலவிய அத்தனை சூட்டையும் தணித்து, ஒரு அழகான நட்புறவை காட்டியது. ஏழு வாரங்களாக நீடித்த போர்க்களத்தின் முடிவில், இந்த ஒரு சம்பவம் அனைத்து கசப்புகளையும் மறக்கச் செய்தது.