மழையால் சொதப்பிய ஆட்டம்... சோகத்தில் ரோஹித் சர்மா... ஆரம்பமே இப்படியா!

இந்தியா  மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக  35 ஓவர்களை வீசிய நிலையில் நிறைவுக்கு வந்தது.

Sep 28, 2024 - 11:35
மழையால் சொதப்பிய ஆட்டம்...  சோகத்தில் ரோஹித் சர்மா... ஆரம்பமே இப்படியா!

இந்தியா  மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக  35 ஓவர்களை வீசிய நிலையில் நிறைவுக்கு வந்தது.

வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்து உள்ளது.  இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 

அங்கு அதிகாலையிலேயே கனமழை பெய்ததால், மைதானத்தில் ஈரம் காயாத நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. 

பின்னர் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தடுப்பை தேர்வு செய்ய வங்கதேசம் அணியின் ஜாகிர் ஹசன் - ஷத்மான் இஸ்லாம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இந்திய அணியின் பும்ரா முதல் ஓவரை வீச ஜாகிர் ஹசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஷத்மான் இஸ்லாம் பவுண்டரிகளாக விளாசி வந்தார்.

ஆகாஷ் தீப் வீசிய 9வது ஓவரில் ஜாகிர் ஹசன் 24 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும், ஷத்மான் இஸ்லாமும் 26 ரன்களிலும் வெளியேற, கேப்டன் ஷான்டோ - மோமினுல் ஹக் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 

3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், கேப்டன் ஷான்டோ 31 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பின்னர் மோமினுல் - முஷ்ஃபிகுர் ரஹிம் இருவரும் வங்கதேசம் அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடந்து கொண்டு சென்றனர். 35 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தது.

அப்போது மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், விளக்குகள் ஒளிரவிட்டப்பட்டதுடன், ஸ்பின்னர்கள் மட்டுமே பவுலிங் செய்யலாம் என்று நடுவர்கள் கூறினர். 

எனினும், ரோஹித் சர்மா அதனை ஏற்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களையே பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து மைதானம் முழுமையாக தார்பாய் கொண்டு மூடப்பட்டது. 

பின்னர் கனமழை தொடங்கி 15 நிமிடங்களில் தீவிரமடைந்ததால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!