விராட் கோலி, சூர்யகுமாரை மிஞ்சிய அபிஷேக் சர்மா.. ஐசிசி டி20 தரவரிசையில் புது வரலாறு படைத்த இந்திய வீரர்!
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா நம்பர் 1 இடத்தில் இருந்து புதிய வரலாறு படைத்துள்ளார். அவர் 931 புள்ளிகளைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலமாக, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தரவரிசையில் 931 புள்ளிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்திருக்கிறார். மேலும், ஐசிசி டி20 தரவரிசை வரலாற்றில் 930 ரேட்டிங் புள்ளிகளைத் தாண்டிய முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை இவர் உருவாக்கியுள்ளார்.
அபிஷேக் சர்மாவின் இந்தச் சாதனை, அவர் பெற்ற ஹாட்ரிக் அரைசதங்கள் காரணமாக சாத்தியமாகியுள்ளது. இதற்கு முன்பு, இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் 919 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதே உலக சாதனையாக இருந்தது.
இந்திய வீரர்களில், டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 912 புள்ளிகளையும், நட்சத்திர வீரர் விராட் கோலி 909 புள்ளிகளையும் பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. இந்த இரு இந்திய வீரர்களின் சாதனைகளையும் அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் இருந்தார். அவர் மொத்தம் 6 போட்டிகளில் ஆடி, 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 314 ரன்களை விளாசினார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஏற்பட்ட மற்ற மாற்றங்கள் பின்வருமாறு:
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்ம் காரணமாக 2 இடங்கள் பின் தங்கி 8வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நட்சத்திர வீரர் திலக் வர்மா 3வது இடத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை தொடக்க வீரர் நிசாங்கா 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் 8 இடங்கள் முன்னேறி 31வது இடத்திற்கு வந்துள்ளார்.
பவுலிங்கை பொறுத்தவரை, இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார். நட்சத்திர ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 9 இடங்கள் முன்னேறி 12வது இடத்திலும், அக்சர் படேல் 13வது இடத்திலும் இருக்கின்றனர். டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
