விராட் கோலியை சமாதானப்படுத்த பிசிசிஐ அனுப்பவுள்ள ‘இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர்’
விராட் கோலியை சமாதானப்படுத்த ‘இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர்’ ஒருவர் அவரிடம் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்த இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், ரோகித் சர்மா திடீரென தனது ஓய்வை அறிவித்தார்
எனினும், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறினார். இதையடுத்து விராட் கோலியும் ஓய்வு பெறும் முடிவில் உள்ளார் என தகவல் வெளியானது.
விராட் கோலி இதுகுறித்து பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும், ஆனால் இந்த முடிவை அவர் மாற்றிக்கொள்ளவேண்டும் என பிசிசிஐ தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் விராட் கோலியை சமாதானப்படுத்த ‘இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர்’ ஒருவர் அவரிடம் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அது சச்சின் டெண்டுல்கர் அல்லது எம்.எஸ்.தோனி என்றும் சிலர் ஊகிக்கும் நிலையில், அது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மட்டும் வெல்லவில்லை. கடந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டி வரை தகுதிபெற்ற இந்திய அணியால் இந்த முறை தகுதி பெற முடியவில்லை.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் சாதனைகள் படைக்க முடியும் என்பதாலும், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு மூத்த வீரராக அவர் இருக்க வேண்டும் என்பதாலும், பிசிசிஐ அவரின் மனதை மாற்ற கட்டாயம் முயற்சிக்கும்.
2011-ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி, 123 போட்டிகளில் விளையாடி 9,230 ரன்களைக் குவித்துள்ளார். அதில், 30 சதங்கள், 31 அரை சதங்களும் அடங்கும். எம்.எஸ்.தோனிக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான கோலியின் தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி 40 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.