கேப்டன்ஷிப் குறித்து சூர்யகுமார் அதிரடி - கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல!

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லேகலவில் இன்று நடக்க உள்ளது.

Jul 27, 2024 - 11:32
கேப்டன்ஷிப் குறித்து சூர்யகுமார் அதிரடி - கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல!

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லேகலவில் இன்று நடக்க உள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 

இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

கடந்த மாதம் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

அதனால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய டி20 அணி களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்நிலையில் டி20 அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்கும் சூர்யகுமார் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில் 'நான் வெவ்வேறு கேப்டன்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். 

கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு பெரிய பொறுப்பாகும். கம்பீருடனான எனது உறவு சிறப்பானது. ஏனெனில் 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரது தலைமையின் கீழ் விளையாடினேன். 

அதில் இருந்துதான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. எங்களது உறவு இன்னும் வலுவாக உள்ளது. நான் எப்படி பணியாற்றுவேன், பயிற்சிக்கு வரும் போது எனது மனநிலை எப்படி இருக்கும் என்பது அவருக்கு தெரியும்.

அவர் ஒரு பயிற்சியாளராக எப்படி செயல்பட முயற்சிப்பார் என்பது எனக்கு தெரியும். எங்களது இந்த அருமையான உறவு எப்படி முன்னோக்கி செல்கிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம். 

போட்டிகளில் சாதித்த போதும், சரியாக செயல்படாத சமயங்களிலும் எவ்வளவு பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த விளையாட்டில் இருந்து கற்றுக்கொண்டேன். 

என்ன நடந்தாலும் அதனை மைதானத்துடன் விட்டு விட வேண்டும். ஏனெனில் கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல. அது வாழ்வின் ஒரு பகுதி தான்.' என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!