பிரித்தானியாவின் NHS-க்கு பெரும் பணியாளர் நெருக்கடி: 50,000 வெளிநாட்டு செவிலியர்கள் வெளியேறப் போகும் அபாயம்
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையான NHS, வரலாற்றிலேயே மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. புதிய குடிவரவு திட்ட மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு செவிலியர்கள் நாடை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையான NHS, வரலாற்றிலேயே மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. புதிய குடிவரவு திட்ட மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு செவிலியர்கள் நாடை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.
Royal College of Nursing (RCN) நடத்திய சமீபத்திய ஆய்வில், 50,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செவிலியர்கள் பிரித்தானியாவில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, நிகர புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு பணியாளர்கள் Indefinite Leave to Remain (ILR) பெற வேண்டிய காலத்தை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உயர்ந்த கல்வித்தகுதி மற்றும் அதிகமான ஆங்கில மொழித் திறன் போன்ற கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட உள்ளன.
இந்த மாற்றங்கள், NHS-ல் பணிபுரியும் 2 லட்சம் வெளிநாட்டு செவிலியர்களில் 25% பேரை நேரடியாக பாதிக்கும். ஆய்வில் கலந்து கொண்ட 5,000+ செவிலியர்களில் 60% பேர், “பிரித்தானியாவில் தொடர்வது இனி சாத்தியம் இல்லை” என்று தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 46,000 பேருக்கு மேல் நிரந்தரமாக நாட்டை விட்டு செல்லக்கூடும் அபாயம் உருவாகியுள்ளது.
RCN பொதுச் செயலாளர் நிக்கோலா ரேஞ்சர் இதை கடுமையாக விமர்சித்து, “இந்த திட்டம் நோயாளிகளுக்கு ஆபத்தானது. சுகாதார அமைப்பின் வெற்றியை விரும்பும் எந்த அமைச்சரும் ILR தகுதி காலத்தை நீட்டிக்க மாட்டார்கள்,”
என்று தெரிவித்தார்.
தற்போது ILR விண்ணப்பக் கட்டணம் 3039 பவுண்ட், ஆனால் செயலாக்கச் செலவு வெறும் 523 பவுண்ட் மட்டுமே. 2003-ல் இது 155 பவுண்ட் மட்டுமே இருந்தது. தொடர்ந்து அதிகரிக்கும் செலவுகள் மற்றும் புதிய நிபந்தனைகள் செவிலியர்களின் எதிர்காலத்தைப் பற்றிய குழப்பத்தை அதிகரித்துள்ளது.
குடும்பம், நிதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என 50% க்கும் மேற்பட்டோர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலை, NHS-ல் காத்திருப்பு காலத்தை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முற்றிலும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
