சோதனை முடிந்தால் தான் டி20 தொடரில் விளையாட முடியும் – சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள நிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சோதனை முடிந்தால் தான் டி20 தொடரில் விளையாட முடியும் – சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள நிலை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முக்கிய துவக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில், சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது கழுத்து வலி காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்க முடியாமல் போனது. அவரது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.

தற்போது, டிசம்பர் 9 முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக இடம் பெற்றுள்ளார். இருப்பினும், அவர் உண்மையில் தொடரில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, சுப்மன் கில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) உடற்தகுதி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார். அங்கு மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அவர் டி20 தொடரில் இடம்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அவர் முழுமையாக சீராகாது எனில், ஜஸ்ப்ரீத் பும்ரா துணைக் கேப்டனாக பொறுப்பேற்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், 2026 டி20 உலகக்கிண்ணம் நெருங்கி வரும் சூழலில், சுப்மன் கில் போன்ற முக்கிய வீரர்கள் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, இந்தத் தென்னாப்பிரிக்க தொடர் அவருக்கு முக்கியமான வாய்ப்பாக அமையும்.

மேலும், சுப்மன் கில் டி20 தொடரில் விளையாட முடியாவிட்டால், துவக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொடர், இந்திய அணியின் தந்திரம் மற்றும் வீரர்களின் உடற்தகுதி போன்ற பல அம்சங்களை சோதிக்கும் ஒரு முக்கியமான தளமாக இருக்கப் போகிறது.