142 வருடமாக எந்த அணியும் செய்யாத சாதனையை செய்த பாகிஸ்தான்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்கு முறை மட்டுமே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருவதுடன், நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சாளர்களான சஜித் கான் மற்றும் நோமன் அலியை முதலில் பந்து வீச செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவக்கிய அரிய நிகழ்வு நடந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்கு முறை மட்டுமே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
சஜித் கான் 29.2 ஓவர்கள் வீசி 6 விக்கெட்களை வீழ்த்தியதுடன், நோமன் அலி 28 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான ஜாஹித் முகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் நான்காவதாக பந்து வீசிய ஆகா சல்மான் என்ற சுழற்பந்துவீச்சாளர் ஒரு ஓவர் மட்டும் வீசி இருந்தார்.
இவர்கள் நால்வர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக முதல் இன்னிங்ஸில் பந்து வீசியதுடன், வேகப் பந்துவீச்சாளராக அமீர் ஜமால் அணியில் இடம்பெற்று இருந்த போதும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதன் மூலம், 142 ஆண்டுகளுக்கு பின் ஒரு அணி முதல் இன்னிங்ஸ் முழுவதும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து மட்டும் பந்துவீசி உள்ள நிகழ்வு நடந்து இருக்கிறது.
முன்னதாக, 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ஜோய் பால்மர் மற்றும் எட்வின் ஈவான்ஸ் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து 115 ஓவர்கள் வீசி இந்த சாதனையை செய்து இருந்தது.
அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த பந்து வீச்சாளரும் பந்து வீசவில்லை என்ற நிலையில், தற்போது பாகிஸ்தான அணி நான்கு ஸ்பின்னர்களை முதல் இன்னிங்ஸில் பயன்படுத்தி இருக்கிறது.