சர்ச்சை பவுலர் ஆக்கி விட்டீர்கள்: 5 விக்கெட் வீழ்த்திய பின் முகமது ஷமி வேதனை பேச்சு!

செய்தியாளர்கள் தன்னைப் போன்ற வீரர்களைச் 'சர்ச்சையான பவுலராக' மாற்றிவிட்டீர்கள் என்றும், இதனால் "உங்களிடம் நான் ஏதேனும் பேசினால் கண்டிப்பாகப் பிரச்சினையில் நான் சிக்கிக் கொள்வேன்" என்றும் முகமது ஷமி பேசினார்.

சர்ச்சை பவுலர் ஆக்கி விட்டீர்கள்: 5 விக்கெட் வீழ்த்திய பின் முகமது ஷமி வேதனை பேச்சு!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி, செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷமியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பெங்கால் அணி, குஜராத் அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முகமது ஷமி, இந்த ஆட்டத்தை ஏன் "கம்பேக் மேட்ச்" என்று குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டு காயம் காரணமாக விளையாடாமல் இருந்தபோது இதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும், ஆனால் இப்போது அது புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முகமது ஷமி தன்னுடைய மனம் கவர்ந்த அணியான பெங்கால் அணிக்கு விளையாடுவது என்பது தன் இதயத்தில் இருந்து விளையாடுவதற்குச் சமம் என்று குறிப்பிட்டார். மேலும், தான் ஊடகங்களிடம் பேசினாலே ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதாக அவர் வேதனை தெரிவித்தார்.

செய்தியாளர்கள் தன்னைப் போன்ற வீரர்களைச் 'சர்ச்சையான பவுலராக' மாற்றிவிட்டீர்கள் என்றும், இதனால் "உங்களிடம் நான் ஏதேனும் பேசினால் கண்டிப்பாகப் பிரச்சினையில் நான் சிக்கிக் கொள்வேன்" என்றும் முகமது ஷமி பேசினார். சமூக வலைத்தளத்தில் மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைத்தான் பேசுகிறார்கள் என்றும், ஆனால் தன்னுடைய பணி என்பது எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் விளையாடுவதுதான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முகமது ஷமி தன் அதிர்ஷ்டத்தை நம்பி முன்னோக்கிச் செல்வதாகவும், வெற்றி, தோல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பகுதிதான் என்றும் தெரிவித்தார். மேலும், என் வாழ்க்கையில் என்ன எழுதி இருக்கிறதோ, அது கண்டிப்பாக நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், சமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன் பிறகு காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அபாரமாகச் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஞ்சி டிராபியில் அவர் பார்மில் இருப்பதால், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.