14 வயது வைபவ் சூர்யவன்ஷியை இலக்கு வைத்த பிசிசிஐ.. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆட உள்ள தொடருக்கு முன்னதாக, அவருக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 

14 வயது வைபவ் சூர்யவன்ஷியை இலக்கு வைத்த பிசிசிஐ.. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி

இந்திய கிரிக்கெட்டின் இளம் பேட்டிங் புயலாகக் கருதப்படும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) சிறப்பு பயிற்சி மையத்தில் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆட உள்ள தொடருக்கு முன்னதாக, அவருக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 

மிக இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், இந்தியா U-19 மற்றும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். 

அண்மையில், இந்திய யூத் அணியில் இடம் பெற்று இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டுத் திரும்பிய வைபவ், உடனடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பு பயிற்சி முகாமில் இணைந்தார்.

தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வைபவ் சென்ற நிலையில், அங்கே, அவருக்காகவே பிரத்யேகமாக ஒரு பயிற்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

இதில், பேட்டிங்கின் நுணுக்கங்கள் மற்றும் போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

"பிசிசிஐ நீண்ட கால நோக்குடன் செயல்படுகிறது. ஓய்வுபெறும் சீனியர் வீரர்களின் வெற்றிடத்தை நிரப்ப, அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்துகிறோம்," என்று வைபவின் சிறுவயது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா கூறியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் ஸ்டைலால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரும் வெற்றிகளைக் கண்டுள்ளார். ஆனால், டெஸ்ட் போன்ற நீண்ட நேர போட்டிகளில், அவரது ஆட்டத்தில் நிலைத்தன்மை இல்லை என்று பயிற்சியாளர் மனிஷ் ஓஜா குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் ஒரு வாரம் நடைபெறும் சிறப்பு பயிற்சிக்கு பிறகு, வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார்.