உடைந்து அழுத அமண்டா அனிசிமோவா.. யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டி தோல்வியால் சோகம்.. அரினா சபலென்கா சாம்பியன்!

அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.

உடைந்து அழுத அமண்டா அனிசிமோவா.. யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டி தோல்வியால் சோகம்.. அரினா சபலென்கா சாம்பியன்!

நியூயார்க்: அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார். இந்த உருக்கமான காட்சி, ஆர்தர் ஆஷ் மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அரினா சபலென்காவிடம் அமண்டா அனிசிமோவா கடுமையாகப் போராடித் தோற்றார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்தது. இருப்பினும், சபலென்காவின் அனுபவமும், அதிரடி ஆட்டமும் அனிசிமோவாவை நிலைகுலையச் செய்தது. இறுதியில், அனிசிமோவா 6-3, 7-6 (3) என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

இந்தத் தோல்வி, கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் அனிசிமோவாவுக்குக் கிடைத்த இரண்டாவது தொடர் தோல்வியாகும். முன்னதாக, இந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும் அவர் இகா ஸ்வியாடெக்கிடம் தோல்வியைத் தழுவியிருந்தார்.

போட்டி முடிந்ததும், தனது இருக்கைக்குச் சென்ற அனிசிமோவா, துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே இருந்தார். தோல்வியின் வேதனையில் மூழ்கியிருந்த அவரை, போட்டி இயக்குனர் ஸ்டேசி அல்லாஸ்டர் அருகில் சென்று ஆறுதல் கூறினார்.

"என் கனவுகளுக்காகப் போராடவில்லை" போட்டிக்குப் பிறகு நடந்த நேர்காணலில், அனிசிமோவா தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். "இந்தக் கோடைக்காலம் எனக்கு மறக்க முடியாதது. அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டிகளில் தோற்பது ஒருபுறம் சாதனையாக இருந்தாலும், அது மிகவும் கடினமானது. இன்று என் கனவுகளுக்காக நான் கடுமையாகப் போராடவில்லை என்று உணர்கிறேன்," என்று அவர் உருக்கமாகக் கூறினார். இறுதிப் போட்டியில் தன்னால் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

சபலென்காவின் சாதனை தனது தோல்வியின் வேதனையிலும், சாம்பியன் பட்டம் வென்ற சபலென்காவைப் பாராட்ட அனிசிமோவா தவறவில்லை. 2014 இல் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு யுஎஸ் ஓபன் பட்டத்தைத் தக்கவைத்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற சபலென்காவைப் புகழ்ந்து பேசினார். 

"நான் அரினாவைப் பாராட்ட விரும்புகிறேன் - நீங்கள் உண்மையிலேயே நம்பமுடியாதவர். நான் உங்களை அடிக்கடி எதிர்கொள்கிறேன். நீங்கள் சாதித்த அனைத்தையும் கண்டு நான் தொடர்ந்து வியப்படைகிறேன். நீங்கள் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்து வருகிறீர்கள். உங்களுக்கும் உங்கள் அணிக்கும் பெரிய வாழ்த்துக்கள் - நீங்கள் அற்புதமானவர்கள்" என்று அனிசிமோவா கூறினார்.