"அவர் சிக்ஸர் மன்னன் தான் ஆனா.." – ஹர்திக் பாண்டியாவை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னாப்பிரிக்க கோச்
இந்திய அணி, 101 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆனால் போட்டி தொடக்கத்தில் இந்தியாவின் நிலை மிகவும் சிரமமாக இருந்தது.
கட்டாக்கில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஹர்திக் பாண்டியாவை, தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அஷ்வெல் பிரின்ஸ் மிகவும் பாராட்டியுள்ளார்.
இந்திய அணி, 101 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆனால் போட்டி தொடக்கத்தில் இந்தியாவின் நிலை மிகவும் சிரமமாக இருந்தது. 14 ஓவர்கள் முடிவில் 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்த சூழலில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, போட்டியின் ஓட்டத்தை முற்றிலும் மாற்றினார். 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்த அவர், ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடங்கிய தனது நேர்த்தியான இன்னிங்ஸ் மூலம், இந்திய அணியை 175 ரன்கள் என்ற போட்டிப் போடக்கூடிய மொத்தத்துக்கு நகர்த்தினார். இதுவே தென்னாப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வெல் பிரின்ஸ், “ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் மன்னன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரிடம் அதற்கு மேலான முதிர்ச்சியும், அமைதியும் உள்ளது. எந்த பந்தை அடிக்க வேண்டும், எதைத் தடுக்க வேண்டும் என்பதை அவர் துல்லியமாக முடிவெடுக்கிறார். இது நீண்ட கால அனுபவத்தின் விளைவு. பந்து அவரது எல்லைக்குள் வந்தால், தயக்கமின்றி முழுமையாக அடிக்கிறார். அவரது இன்னிங்ஸ் மிகச் சிறப்பாக இருந்தது,” என்று பாராட்டினார்.
இந்த வெற்றியில் உற்சாகமடைந்த இந்திய அணி, இரண்டாவது டி20 போட்டியை டிசம்பர் 11-ஆம் தேதி சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் தொடரவுள்ளது.
