வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் சதம்: 78 பந்தில் சதம் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் புது வரலாறு படைத்த 14 வயது இந்திய வீரர்!
இன்றைய ஆட்டத்தில், வைபவ் சூர்யவன்சி மொத்தமாக 86 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் ஒன்பது பவுண்டரி, எட்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 கிரிக்கெட் அணி, அங்கு நடைபெறும் யூத் டெஸ்ட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தப் பயணத்தில், இந்திய அணி ஏற்கனவே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் யூத் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 243 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஹோகன் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சுத் தரப்பில், தேவேந்திரன் ஐந்து விக்கெட்டுகளையும், கிஷன் குமார் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைத் துரத்தி இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய பேட்டிங்கைத் தொடங்கியது. இதில், 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பினார். அவர் பவுண்டரி சிக்ஸர் என விளாச ஆரம்பித்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் பதற்றம் அடைந்தனர். சிக்ஸர்களை பறக்கவிட்டதன் விளைவாக, ரன்கள் புல்லட் வேகத்தில் உயர்ந்தன.
இதன் மூலம், வைபவ் சூர்யவன்சி 78 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தச் சதம், ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாகச் சதம் அடித்த அண்டர் 19 வீரர் என்ற புதிய சாதனையை அவருக்குப் பெற்றுத் தந்தது.
மேலும், அண்டர் 19 கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 100 பந்துக்குள் இரண்டு சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, ஆஸ்திரேலிய அண்டர் 19 அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வைபவ் சூர்யவன்சி 58 பந்துகளில் சதம் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில், வைபவ் சூர்யவன்சி மொத்தமாக 86 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் ஒன்பது பவுண்டரி, எட்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்தார்.
அவருடன், சிஎஸ்கே வீரரும் அண்டர் 19 கேப்டனுமான ஆயுஷ் மாத்ரே 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நடுவரிசையில் வேதாந்த் திரிவேதி 14 ரன்கள் எடுத்தார். இறுதியாக, இந்திய அண்டர் 19 அணி 81.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், தற்போது ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்திருக்கிறது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 177 ரன்கள் குறைவாகும்.
