ஊழல் வழக்கு: முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 15 ஆண்டு சிறை, அபராதம்
72 வயதான நஜீப் ரசாக் மீது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளும், பணம் மோசடி தொடர்பான 21 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 1MDB அரசு முதலீட்டு நிதி தொடர்பான மிகப்பெரிய ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15 ஆண்டு சிறைத் தண்டனையும் 13.5 பில்லியன் ரிங்கிட் (சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26, 2025 வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை நாட்டின் உயர்நீதிமன்றம் வழங்கியது.
72 வயதான நஜீப் ரசாக் மீது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளும், பணம் மோசடி தொடர்பான 21 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. 1MDB நிதியிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகை அவரது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காலின் லாரன்ஸ் சேகுரா, அதிகார துஷ்பிரயோக குற்றங்களுக்கு தலா 15 ஆண்டு சிறைத் தண்டனையும், பணம் மோசடி குற்றங்களுக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தார். இந்த அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படுவதால், மொத்தமாக அவர் மேலும் 15 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்டனை, அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் முந்தைய 1MDB வழக்கின் சிறைத் தண்டனை முடிந்த பின்னர் அமலுக்கு வரும் என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும் 13.5 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை செலுத்தத் தவறினால் கூடுதல் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக நஜீப் ரசாக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது நீல நிற உடையில் அமைதியாக நின்றிருந்த நஜீப், பின்னர் குற்றவாளிகள் அமர்ந்திருந்த இடத்தில் சோர்வுடன் அமர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
