தமிழக வீரருக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? தந்தை ஆவேசம்.. கடுமையான குற்றச்சாட்டு... என்ன நடந்தது?
வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது திறமையை பலரும் கண்டுகொள்வதில்லை என வாஷிங்டன்சுந்தரின் தந்தை மணி சுந்தர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் தந்தை மணி சுந்தர், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தனது மகன் சிறப்பாக விளையாடினாலும் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்தது. கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் வாஷிங்டன் சுந்தர்.
இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து, போட்டியை தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்தனர். இந்த இக்கட்டான சூழலில், வாஷிங்டன் சுந்தர் 206 பந்துகளில் 101 ரன்கள் குவித்து தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
இது குறித்து பேசிய வாஷிங்டன்சுந்தரின் தந்தை மணி சுந்தர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது திறமையை பலரும் கண்டுகொள்வதில்லை.
மற்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, ஆனால் என் மகனுக்கு மட்டும் ஒரு சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றாலும் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்படுகிறார். இது என்ன நியாயம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"2021-ல் சென்னை மற்றும் அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எஃ திராக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவர் ஆட்டமிழக்காமல் 85 மற்றும் 96 ரன்கள் எடுத்தார். ஒருவேளை அந்தப் போட்டிகளில் அவர் சதம் அடித்திருந்தாலும், அடுத்த போட்டியில் அவரை நீக்கியிருப்பார்கள்.
வேறு எந்த இந்திய வீரருக்காவது இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்குமா? இந்தத் தொடர் புறக்கணிப்புகள்தான் அவரை மனதளவில் மேலும் வலிமையாக்கியுள்ளது, அதன் விளைவைத்தான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்" என்று ஆவேசமாக கூறினார்.
"அவர் தற்போது விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடந்த ஐபிஎல் 2025 தொடரில், 15 போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 24 பந்துகளில் 48 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை எப்படி ஆதரிக்கிறது என்று பாருங்கள். அது போன்ற ஒரு ஆதரவு என் மகனுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட கிடைக்கவில்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன் சுந்தரின் தந்தை முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது