கண்ணீரை மறைத்துக்கொண்டு நின்ற கோலி.. கட்டி பிடித்து சச்சின் சொன்ன ஆறுதல்... நடந்தது என்ன ?

சச்சினை தவிர வேறு யாருக்கும் உலகக்கோப்பை தோல்வி குறித்து அதிகம் தெரியாது என்ற நிலையில், சச்சின் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். 

Nov 20, 2023 - 12:32
கண்ணீரை மறைத்துக்கொண்டு நின்ற கோலி.. கட்டி பிடித்து சச்சின் சொன்ன ஆறுதல்... நடந்தது என்ன ?

2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை  ஆஸ்திரேலிய அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது.

இந்தியா தோல்வி அடைந்த நிலையில், போட்டி முடிந்த உடன் கோப்பை மற்றும் சிறந்த வீரர் விருது வழங்கும் நிகழ்வில் இந்திய வீரர்கள் கண்ணீரை அடக்கிக் கொண்டு பங்கேற்றனர்.

அப்போது விருது வழங்க வந்த சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறியமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 1992 முதல் 2011 வரை ஆறு உலகக்கோப்பை தொடர்களில் ஆடிய அனுபவம் கொண்டவர் சச்சின் டெண்டுல்கர். ஆறு முறை முயன்றும், ஆறாவது முறைதான் அவரால் உலகக்கோப்பை வெல்ல முடிந்தது.

சச்சினை தவிர வேறு யாருக்கும் உலகக்கோப்பை தோல்வி குறித்து அதிகம் தெரியாது என்ற நிலையில், சச்சின் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இந்தியா தோல்வியடைந்த பின் முகமது சிராஜ், கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுதனர். விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் கீழே சோகத்தில் தலைகுனிந்து அமர்ந்தார். விராட் கோலி உறைந்து போய் நின்றார்.

எந்த வீரரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தோல்வி கொடுத்த வலியில் வார்த்தை வராமல் நின்று கொண்டு இருந்தனர். சச்சின் அவர்களை தட்டிக் கொடுத்து, கட்டி அணைத்து தேற்றினார்.

2003 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் தான் கங்குலி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. தற்போது விராட் கோலி உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றது போலவே, அப்போது சச்சின் டெண்டுல்கர் தொடர்நாயகன் விருது வென்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!