தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து திடீரென விலகிய ராகுல் டிராவிட்... நடந்தது என்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்புவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல், ராஜஸ்தான் அணிக்குள் பெரும் குழப்பம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக, டிராவிட் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வார் என்று சனிக்கிழமை (30) அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இந்தச் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு விரிவான பொறுப்பை ஏற்கும்படி டிராவிட்டிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், அவரது இரண்டாவது வருகை ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறி, சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுடன் இணைய விரும்புவதாக செய்தி வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகியிருப்பது, சாம்சனின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையே அணியில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுவதுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஜெய்ஸ்வால் அல்லது ரியான் பராக் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் ஒரே நேரத்தில் அணியில் அதிருப்தியில் இருப்பது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ இருப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் விலகிய நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் நீடிப்பாரா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
