ஜோடியாக வெளியேறிய அணிகள், 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று வெற்றி! மும்பை முதலிடம்!
மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க, இறுதியாக வந்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 208 ஸ்டிரைக்ரேட்டில் தலா 48 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வெளியேறிய நிலையில், மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை எதிர்த்து களம்கண்டது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி மும்பை அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியதுடன், 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட ரிக்கல்டன் 61 ரன்கள் அடிக்க, ஹிட்மேன் ரோகித் சர்மா 9 பவுண்டரிகளை விரட்டி 53 ரன்கள் அடித்து அசத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க, இறுதியாக வந்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 208 ஸ்டிரைக்ரேட்டில் தலா 48 ரன்கள் அடித்து அசத்தினர்.
6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ஹர்திக் பாண்டியா துவம்சம் செய்ய, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வேடிக்கை காட்டிய சூர்யகுமார் அசத்தினார். இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் 217 ரன்கள் என்ற அபாரமான ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி குவித்தது.
218 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயது சூர்யவன்ஷியை 0 ரன்னில் வெளியேற்றினார் தீபக் சாஹர்.
கடந்த போட்டியில் 35 பந்தில் சதமடித்த சூர்யவன்ஷி ஏமாற்றத்துடன், வெளியேறினார். தொடர்ந்து டிரெண்ட் போல்ட்டுக்கு எதிராக அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஜெய்ஸ்வாலை அடுத்த பந்திலேயே போல்டாக்கி வெளியேற்றினார்.
பின்னர், டிரெண்ட் போல்ட் 9 ரன்னில் நிதிஷ் ரானாவை வெளியேற்ற அடுத்த ஓவரை வீசவந்த ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கினார்.
5 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியில் அடுத்தவந்த ஒரு வீரரால் கூட நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. கரண் ஷர்மாவும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, 117 ரன்களுக்கே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கேவை தொடர்ந்து இரண்டாவது அணியாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான் அணி.
அத்தடன், தொடர்ச்சியாக 6வது போட்டியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்சிபியை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.
அதுமட்டுமில்லாமல் 12 வருடத்திற்கு பிறகு ஜெய்ப்பூரில் வெற்றிப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதல் 5 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் நீடித்தது. ஆனால் அதற்கடுத்த 6 போட்டிகளிலும் வரிசையாக வென்று தரமான கம்பேக் கொடுத்து வெறித்தனமான ஆட்டத்தை ஆடி வருகிறது.