ஐபிஎல் போலவே ஆனால் 10 ஓவர்தான்.. பிசிசிஐ-யின் அதிரடி திட்டம் இதுதான்!
ஐபிஎல் மாதிரியே டி10 போட்டிகளும் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் மாதிரியே டி10 போட்டிகளும் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச நாடுகளில் கவனம் ஈர்த்துள்ள டி10 என்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருந்த காலத்தில் டி20 என்ற புதிய வகையிலான போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரையில் நாள் முழுக்க கிரிக்கெட் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு, 3 மணி நேரத்தில் சுவாரஸ்யத்தை அள்ளித் தந்தன டி20 போட்டிகள்.
அதுவரையில் சில நாடுகளே விளையாடி வந்த கிரிக்கெட்டை, உலகளாவிய போட்டியாக மாற்றிய பெருமையும் டி20 போட்டிகளையேச் சேரும். இந்த நிலையில்தான், கிரிக்கெட் உலகில் அடுத்த பாய்ச்சலாக டி20-ஐ விட சுவாரஸ்யமிக்க டி10 என்ற, 10 ஓவர்கள் போட்டி அண்மைக்காலமாக பிரபலம் அடைந்துவருகிறது.
முதன்முறையாக 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய அபுதாபி டி10 போட்டிக்கு ஐசிசி-யும் ஒப்புதல் வழங்கியது. அதோடு, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், கென்யா நாடுகளும் டி10 போட்டியை முன்னிலைப்படுத்தி வருகின்றன.
டி10 போட்டிகளில் கிறிஸ் கெய்ல், நிக்கலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், இயன் மோர்கன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் கலந்துகொள்வதால் இதற்கு வரவேற்பு பெருகியது. இதனால், இந்தியாவிலும் டி10 போட்டியை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு விளம்பரதாரர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டிகளை, அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது ஐபிஎல்-ன் புகழை மங்கச் செய்துவிடாமல் காக்கவும் சில முடிவுகளை பிசிசிஐ எடுக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இதனை TIER-2 போட்டிகளாகவோ, அல்லது வயது வரம்பை நிர்ணயித்து ஐபிஎல்-ன் நட்சத்திர வீரர்கள் பங்கேற்காத வகையிலோ விதிகள் வகுக்கப்பட வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, ஒன்றரை மணி நேரத்தில் முடியும் டி10 போட்டிகளும் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |