டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன்... காரணம் இதுதான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது ரிஷப் பண்ட் கால் விரலில் காயம் ஏற்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது ரிஷப் பண்ட் கால் விரலில் காயம் ஏற்பட்டது.
அந்த காயம் மோசமானதாக இருந்ததுடன், ரிஷப் பண்ட் காயம் காரணமாக முதல் நாள் ஆட்டத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். எனினும், இரண்டாவது நாள் அன்று அதே காயத்துடன் வந்து மீண்டும் பேட்டிங் செய்து அரை சதமடித்தார்.
அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை என்பதால், இப்போட்டியில் துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் உருவாகவில்லை.
இந்த நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் மட்டும் செய்வாரா, அணியில் இருப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ரிஷப் பண்ட் ஐந்தாவது போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
அவருக்குப் பதிலாக நாராயணன் ஜெகதீசன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜெகதீசனுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக துருவ் ஜுரல் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் தொடரில் துருவ் ஜுரல் இதுவரை ஒரு போட்டியில் கூட அதிகாரபூர்வமாக விளையாடவில்லை.
எனினும், ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் சுமார் 250 ஓவர்களுக்கு அதிகமாக விக்கெட் கீப்பிங் பணியைச் செய்திருக்கிறார்.
இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் இழப்பு நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான். எனினும், பேட்டிங்கில் துருவ் ஜுரல் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.