உலகக் கோப்பை கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில்2-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா 

உலக கோப்பையில் தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Oct 12, 2023 - 11:38
உலகக் கோப்பை கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில்2-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா 

உலக கோப்பையில் தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 2011க்குப் பிறகு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. 

எனவே 2011 போலவே, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்தநிலையில், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. 

சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. இருப்பினும் இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் 10 விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தொடக்க அதிர்ச்சியாக இருந்தது. எக்ஸ்ட்ராக்கள் மூலம் 2 ரன்கள் கிடைத்த நிலையில், ரோகித், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் டக் அவுட் ஆகினர். 

இந்தநிலையில் ஆபத்வாந்தனாக கோலி – ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 85 ரன்களும் ராகுல் 97 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 

ஷஹிதி 80 ரன்களும் அஸ்மத்துல்லா 62 ரன்களும் எடுக்க ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

சேசிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் ருத்ர தாண்டவம் ஆடினார். பவுண்டரிகளும் சிக்சருமாக விளாசி ஆப்கான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 

ரோகித் – இஷான் கிஷன் ஜோடி முதல் விக்கெட்க்கு 156 ரன்கள் சேர்த்தது. பின்னர் ரோகித் 63 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து கோலியின் அரைசதத்துடன் இந்திய அணி எளிதாக ஆப்கானை வென்றது.

இவ்விரு வெற்றிகள் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. மூன்று அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!