IND vs AUS: மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பிருக்கா? வானிலை நிலவரம் என்ன?

சென்னையில் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Oct 8, 2023 - 11:59
IND vs AUS: மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பிருக்கா? வானிலை நிலவரம் என்ன?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 8 அணிகள் தங்களின் முதல் போட்டியில் விளையாடிவிட்டன. 

இந்த நிலையில் 5வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த இரு அணிகளான இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்பதால், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை "Black Soil" பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதால், நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

இதனால் இந்திய ஹர்திக் பாண்டியாவையும் சேர்த்து 3 வேகம் மற்றும் 3 சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும்.

இதனிடையே சென்னையில் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

சென்னை வானிலையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மழை பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அணி விளையாடவிருந்த இரு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதன் காரணமாகவே இந்திய அணி வீரர்கள் சென்னை மைதானத்தில் கூடுதல் நேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

மீண்டும் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும். அதுமட்டுமல்லாமல் மழை காலத்தில் உலகக்கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஏற்கனவே பிசிசிஐ மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது இந்திய அணி ஆட்டமும் நடக்கவில்லை என்றால், ஜெய் ஷா மீதான விமர்சனங்கள் இன்னும் அதிகரிக்கும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!