சிஎஸ்கே அணியில் விளையாட முடியாது... ஆனால் இந்தியா ஏ அணியில் ருதுராஜ் எப்படி?

2025 ஐபிஎல் தொடரில் முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டியுடன் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். 

சிஎஸ்கே அணியில் விளையாட முடியாது... ஆனால் இந்தியா ஏ அணியில் ருதுராஜ் எப்படி?

2025 ஐபிஎல் தொடரில் முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டியுடன் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். 

அவர் விலகியதைத் தொடர்ந்து அணியின் கேப்டனாக  தோனி நியமிக்கப்பட்டார். கேப்டனை மாற்றிய பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வகையிலும் முன்னேறவில்லை.

14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில், காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர் முடியும் முன்னரே இந்தியா 'ஏ' அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து சென்றுள்ளமை பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உண்மையாகவே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததா? அவருக்கு உண்மையாகவே முழங்கை காயம் இருந்தால், எப்படி இந்தியா 'ஏ' அணியில் இடம்பிடித்து இங்கிலாந்துக்கு செல்ல முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா 'ஏ' அணி மூன்று பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளதுடன், இவை நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளாக நடைபெறும் நிலையில், இதில் ஒரு பேட்ஸ்மேன் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டி இருக்கும். இதனால், காயத்திலிருந்து மீண்ட ஒருவர் நிச்சயமாக உடல் தகுதித் தேர்வுக்குப் பிறகே இது போன்ற போட்டிகளில் விளையாட முடியும். 

ஜூன் 3 முதல் போட்டி துவங்கும் நிலையில், அதற்கு முன்னதாக அனைவரும் வலைப் பயிற்சியும் செய்ய வேண்டும். வலைப்பயிற்சி செய்யாத வீரர் போட்டியிலும் இடம்பெற முடியாது. அப்படியென்றால் ருதுராஜ் கெய்க்வாட் முழு உடல் தகுதி இருப்பதாகவே கருதப்பட்டு இந்தியா 'ஏ' அணியுடன் பயணம் செய்திருக்கிறார். 

அதன்படி பார்த்தால், ஐபிஎல் தொடரின் பிற்பகுதியிலும் அவர் பேட்டிங் செய்திருக்க முடியும் என்ற நிலையில், எதற்காக சிஎஸ்கே அணி அவர் முழு ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாது என்று சொல்லி அவரை ஒட்டுமொத்தமாக விலக்கியது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் 5 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியில் அதிருப்தி அடைந்துதான் அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் நீக்கியதா? கருத்து வேறுபாடுகள் ஏதேனும் ஏற்பட்டதா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

முழங்கை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக செய்தி வெளியான அதே சமயம் அவர் கால்பந்தை தனது கைகளில் எடுத்து சுழற்றிக்கொண்டு இருந்தார். 

பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு முழங்கை காயத்துடன் இருக்கும் ஒருவர் எந்த வலியும் இன்றி எப்படி கால்பந்தை இரண்டு கைகளிலும் மாற்றி, மாற்றி சுழற்றுகிறார் என்ற கேள்வி அப்போதே எழுந்தது குறிப்பிடத்தக்கது.