சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனம் திறந்த அஸ்வின்!
38 வயதாகும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதுடன், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் தன் பெயரில் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டார். பின்னர் சஹால், குல்தீப் ஆகியோரது வருகையின் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
அதேசமயம், அவ்வப்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்த நிலையில், தனது இடத்தை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவர் 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த நிலையிலும், அவருக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தற்சமயம் 38 வயதாகும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதுடன், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் தன் பெயரில் வைத்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வை அறிவித்ததற்கான காரணம் குறித்து யூடியூப் பக்கத்தில் பேசுகையில், “பெரும்பாலும் வெளிநாட்டு தொடர்களில் அணியில் இருந்தாலும், லெவனில் இடம் கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலையில் இருந்தேன்.
அது என்னை மனதளவில் பெரிதும் பாதித்தது. மேலும், தொடர்ச்சியான சுற்றுப்பயணங்கள் மற்றும் வெளியூர் போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் மனதளவில் சோர்வடைந்துவிட்டேன்.
அது கிரிக்கெட் மீதான ஆர்வத்தை குறைத்துவிட்டது. ஆனால் நான் ஓய்வுபெறுவதாக அறிவித்தது, அணிக்கு பங்களிக்க விரும்பாததால் எடுத்த முடிவு அல்ல. மாறாக, இங்கு நான் அமர்ந்திருப்பதற்கு பதிலாக, வீட்டில் இருந்து குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடலாமா? என்று எண்ண ஓட்டங்கள் என்னுள் தோன்றின.
ஏனெனில் அவர்களும் வளர்ந்து வருகிறார்கள், நான் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ற கேள்விகள் எழுந்தன. அதன் காரணமாகவே நான் அந்த முடிவுவை எடுத்தேன்” என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் முதலில், 34-35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுதான் சரியான நேரமாக இருக்கும் என்றும் நினைத்தேன். ஆனால் அதன்பின் நான் என் வாழ்க்கையில் இவ்வளவு காலம் செலவழித்துள்ளேன். அதனால் தற்போது நான் மிகவும் வயதானவன் போல தோன்றுகிறது” என்றார்.
