இதுவரை யாருமே செய்யாத சாதனை.. சிஎஸ்கே வீரரின் அதிர்ஷ்டம்... 32 போட்டிகளில் 100% வெற்றி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரர் சிவம் துபே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாருமே செய்யாத ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரர் சிவம் துபே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாருமே செய்யாத ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அவர் இந்திய அணிக்காக விளையாடிய 32 டி20 போட்டிகளில், இந்தியா இதுவரை ஒரு முறை கூட தோற்றதில்லை என்ற அற்புதமான சாதனையை படைத்து இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில், சிவம் துபே இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா நான்கு ஓவருக்கு 45 ரன்கள் விட்டுக் கொடுத்து தடுமாறிய நிலையில், சிஎஸ்கே அணி வீரரான சிவம் துபே, தாம் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்கும் வகையில், தனது நான்கு ஓவருக்கு 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
சிவம் துபே இடம்பெற்ற 32 டி20 போட்டிகளில், இரண்டு போட்டிகள் மட்டும் மழை காரணமாக முடிவில்லாமல் இருந்திருக்கின்றன. மற்ற 29 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது கணிக்க முடியாத விஷயமாக உள்ள நிலையில், சிவம் துபே இந்திய அணிக்காக 100% வெற்றி சதவீதத்தை வைத்திருப்பது உலக கிரிக்கெட்டில் யாருக்குமே நடக்காத ஒரு விஷயமாகும்.
இந்த அசாதாரணமான சாதனை எப்படி சாத்தியமானது என்பது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சிவம் துபே தற்போது பேட்ஸ்மேனாக இருப்பதை விட பந்துவீச்சாளராக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.
சிவம் துமே பந்து வீசும் போது, எதிர் அணி பேட்ஸ்மேன்கள், அவருடைய பௌலிங்கை அடித்து ஆடி ரன்களைச் சேர்க்கலாம் அல்லது ரன் அடிக்கும் வாய்ப்பு என நினைத்து விக்கெட்டுகளை இழந்து வருவதாக ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தான் சிவம் துபே பந்துவீச்சில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமக்குக் கிடைக்கும் வாய்ப்பையும் அவர் நன்றாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதுதான் சிவம் துபேவின் வெற்றியின் மந்திரமாக இருப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த சூப்பர் ஃபோர் சுற்றில் வரும் புதன்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
