அமெரிக்க எச்1பி விசா கட்டண உயர்வு: புதிய ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா!

அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அமெரிக்க எச்1பி விசா கட்டண உயர்வு: புதிய ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா!

அமெரிக்கா விதித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்விற்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, இந்திய மென்பொறியாளர்கள் உள்ளிட்ட உலக நிபுணர்களை தங்கள் நாட்டுக்கு ஈர்க்கும் நோக்கில், சீன அரசு அதிக நிபந்தனைகள் இல்லாத புதிய ‘கே’ விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணியாற்றுபவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்க அரசு ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக திடீரென உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேருவதைத் தடுக்கும் மறைமுக முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்கர்கள் மத்தியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது கடும் அதிருப்தி காணப்பட்டாலும், இது நாட்டின் நலனுக்கு எதிரானது என்று எக்ஸ் சமூக வலைதளத்தின் முன்னாள் மூத்த அதிகாரி எஸ்தர் கிராபோர்டு தெரிவித்துள்ளார். 

‘எக்ஸ்’ (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் சவால்கள் எழுந்தபோது, இந்தியப் பொறியாளர்களும் சீனப் பொறியாளர்களுமே நேரம் காலம் பார்க்காமல் உழைத்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, எக்ஸ் தளத்தைத் தொடர்ந்து இயங்கச் செய்தனர் என எஸ்தர் கிராபோர்டு குறிப்பிட்டுள்ளார். சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால்தான் அமெரிக்காவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியான சிலிகான் பள்ளத்தாக்கு, உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையகமாகக் கருதப்படுகிறது. இங்கு பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர், மேலும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். 

நாசா, ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை தங்கள் நாடுகளுக்கு ஈர்க்கத் தீவிர முயற்சி செய்து வருகின்றன என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதுகின்றனர். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் இருந்து விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டதால் ஏற்பட்ட தொழில்நுட்ப உந்துசக்தியையும் அவர்கள் நினைவுபடுத்தினர்.

தொழிலதிபர் எலான் மஸ்க், தான் எச்1பி விசா மூலமாகவே அமெரிக்காவில் நுழைந்ததாகவும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் போன்ற முன்னணி நிறுவனங்களை அமெரிக்காவில் உருவாக்கியுள்ளதாகவும் முன்பு தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ‘ஆர்’ விசா மூலம் 180 நாட்களும், ‘இசட்’ விசா மூலம் ஓராண்டும் சீனாவில் தங்கிப் பணியாற்ற முடியும். ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கே விசா மூலம் நீண்டகாலம் சீனாவில் தங்கிப் பணியாற்ற முடியும்.

சீன வெளியுறவுத் துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த கே விசாவைப் பெறுவதற்கு சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாகப் பெறலாம். கல்வி பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருக்கும் இளம் வல்லுநர்களும் கே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

2035-க்குள் சீனாவை உலகின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப தலைமையகமாக மாற்ற அதிபர் ஜி ஜின்பிங் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைவதற்காக, இளம் ஆராய்ச்சியாளர் மற்றும் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற இரண்டு திட்டங்களைச் சீன அரசு செயல்படுத்த உள்ளது என்றும் சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.