5ஆவது நாளுக்கு சென்ற ஆட்டம்.. தென்னாப்பிரிக்காவை திணறடித்த இலங்கை... இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்!

இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் - தனஞ்செயா டி சில்வா இருவரின் அபார ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Dec 9, 2024 - 11:49
5ஆவது நாளுக்கு சென்ற ஆட்டம்.. தென்னாப்பிரிக்காவை திணறடித்த இலங்கை... இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவு 5வது நாளுக்கு சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் - தனஞ்செயா டி சில்வா இருவரின் அபார ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 358 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி நிசாங்கா மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களின் அபார ஆட்டத்தால் 328 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

இதன்பின் 30 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்திருந்தது. 

இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தை கேப்டன் பவுமா 48 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 36 ரன்களுடனும் தொடங்கினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பவுமா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்டப்ஸ் 47 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் பெடிங்ஹம் 35 ரன்கள் எடுக்க, டெய்லெண்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 

இதனையடுத்து, இலங்கை அணியின் வெற்றிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் மாஸ் ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். தொடக்க வீரர் கருணரத்னே 1 ரன்னிலும், நிசாங்கா 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 

பின்னர் வந்த அனுபவ வீரரான சண்டிமாஸ் 29 ரன்களில் வெளியேற, சீனியர் வீரர் மேத்யூஸ் மஹாராஜ் சுழலில் சிக்கினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கமிண்டு மெண்டிஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்து சோகமாக பெவிலியன் திரும்பினார். 

இதனால் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாற்றத்தை சந்தித்தது. அப்போது இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா - குசால் மெண்டிஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து 19 ஓவர்கள் போராடி 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க இலங்கை அணி 4வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை சேர்த்துள்ளது.

குசால் மெண்டிஸ் மற்றும் தனஞ்செயா டி சில்வா இருவரும் தலா 39 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர். 5வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் வெற்றிக்கு 143 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளது. 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 2 நாட்களில் தோல்வியை சந்தித்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கை அணி 5வது நாளுக்கு ஆட்டத்தை கொண்டு சென்றிருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!