ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்! 9 புதிய வீரர்கள் சேர்ப்பு – பிசிசிஐ கொடுத்த புது ட்விஸ்ட்

டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்! 9 புதிய வீரர்கள் சேர்ப்பு – பிசிசிஐ கொடுத்த புது ட்விஸ்ட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கிறது. 2025 டிசம்பர் 9-ஆம் தேதி, அபுதாபியில் நடைபெறவிருக்கும் மினி ஏலத்திற்காக 1,355 வீரர்களில் இருந்து 350 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது. ஆனால், அடுத்த நாளான டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய பட்டியலில் கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்த ஸ்வஸ்திக் சிகாரா, மலேசிய வீரர் வீரன்தீப் சிங், திரிபுராவின் ஆல்ரவுண்டர் மணி சங்கர் முரசிங், ஹைதராபாத் வீரர் சாமா மிலிந்த், கர்நாடகாவின் கேஎல் ஸ்ரீஜித், தென்னாப்பிரிக்காவின் ஈதன் போஷ், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் கிரீன், உத்தரகண்டின் ராகுல் ராஜ் நம்லா மற்றும் ஜார்கண்டின் விராட் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 359 வீரர்களில் 247 பேர் இந்தியர்களும், 112 பேர் வெளிநாட்டு வீரர்களும் ஆவர். ஆனால், மொத்தம் 10 ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் மொத்தம் 77 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இதில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்பு வெளியிடப்பட்ட 350 வீரர் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் சவுத்ரி, இந்திய வீரராக தவறுதலாக பட்டியலிடப்பட்டிருந்தார். பின்னர் பிசிசிஐ அந்த பிழையை சரிசெய்து, அவரை வெளிநாட்டு வீரர் பிரிவில் சேர்த்தது.

வெளிநாட்டு வீரர்கள் விவரம் பார்க்கும்போது, இங்கிலாந்திலிருந்து 21 பேர், ஆஸ்திரேலியாவிலிருந்து 20 பேர், தென்னாப்பிரிக்காவிலிருந்து 16 பேர், இலங்கையிலிருந்து 12 பேர், ஆப்கானிஸ்தானிலிருந்து 10 பேர், வெஸ்ட் இண்டீஸிலிருந்து 9 பேர், வங்கதேசத்திலிருந்து 7 பேர் மற்றும் மலேசியாவிலிருந்து 1 பேர் என மொத்தம் 112 வெளிநாட்டு வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2026 மினி ஏலம் 2025 டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெறவிருக்கிறது.