அபிஷேக் சர்மா–ரிங்கு சிங் மரண அடி: நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்து, நியூசிலாந்துக்கு 239 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இந்திய இன்னிங்ஸின் ஹைலைட்டாக, இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து ஸ்டேடியத்தை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அவருக்கு துணையாக சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் ஃபினிஷராக களமிறங்கிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்ததால் இந்தியா 230 ரன்கள் எல்லையைத் தாண்டி 238-ல் நிறுத்தியது.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாகப் பந்துவீசியார். மற்ற பவுலர்கள் இந்திய பேட்டர்களின் தாக்குதலுக்கு முன் திணறினர்.
239 ரன்கள் இலக்கைத் துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து தொடக்கமே சறுக்கியது. டெவான் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) என முதல் இரு விக்கெட்டுகளையும் வெறும் 2 ரன்களுக்கு இழந்தது. மத்தியவரிசையில் க்ளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் அடித்து எதிர்ப்பு காட்டினார். அவருக்கு துணையாக மார்க் சாப்மேன் 39, டேரில் மிட்செல் 28, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர். எனினும், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களே எடுத்து, 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வியடைந்தது.
இந்திய பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். அதிரடி அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
