கடைசி நேர ட்விஸ்ட்.. பாகிஸ்தான் செய்த சொதப்பல்.. வென்ற ஆஸ்திரேலியா

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி மற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து வேகமாக ரன் குவித்தாலும், ஆடம் ஜம்பா மற்றும் ஹேசல்வுட் ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றம் அந்த அணியின் தோல்விக்கே காரணமாக அமைந்தது.

Oct 21, 2023 - 12:42
கடைசி நேர ட்விஸ்ட்.. பாகிஸ்தான் செய்த சொதப்பல்.. வென்ற ஆஸ்திரேலியா

2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் ஆடம் ஜம்பா முக்கிய காரணமாக இருந்தனர். அவர்கள் மட்டும் இல்லை என்றால் வெற்றி பெற்று இருக்கலாம்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்தாலும் 367 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி மற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து வேகமாக ரன் குவித்தாலும், ஆடம் ஜம்பா மற்றும் ஹேசல்வுட் ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றம் அந்த அணியின் தோல்விக்கே காரணமாக அமைந்தது.

முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கில் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் ஒருவர் கூட சரியாக நின்று ரன் எடுக்கவில்லை. ஆனாலும், வார்னர் - மார்ஷ் அடித்த ரன்களால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹாரிஸ் ரௌப் 8 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்தாலும், 3 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்தார். 

அடுத்து பாகிஸ்தான் அணி 368 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது. பெங்களூர் மைதானம் சிறியது என்பதால் இந்த இலக்கை பாகிஸ்தான் அணி எட்ட அதிக வாய்ப்பு இருந்தது.

பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக் ஜோடி சிறப்பான துவக்கம் அளித்தது. ஷபிக் 64 ரன்களும், இமாம் 70 ரன்களும் குவித்தனர். 

அடுத்து வந்த உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் பாபர் அசாம் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரிஸ்வான் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

அடுத்து இஃப்திகார் அஹ்மத், சவுது ஷகீல் என இரண்டு அதிரடி வீரர்கள் களத்தில் இருந்தனர். அதனால், பாகிஸ்தான் அணி வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. பாகிஸ்தான் அணியும் ஓவருக்கு 6.75 ரன்கள் என்ற அளவுக்கு ரன் குவித்து இருந்தது.

ஆனால், அதன் பின் பாகிஸ்தான் அணி கடைசி 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு காரணம் ஹேசல்வுட் மற்றும் ஆடம் ஜம்பா தான்.

ஹேசல்வுட் 10 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் ஓவர்களில் றன எடுக்க முடியாத சூழல் இருந்ததால் பாகிஸ்தான் அணி மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மட்டுமே ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அது போல, ஆடம் ஜம்பா 10 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் முக்கிய விக்கெட்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை வீழ்த்தினார். கடைசி 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!