ரகசிய கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெற்றிக்கோப்பை! பாகிஸ்தான் அமைச்சர் மீது புகார்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், இந்தியா வென்ற வெற்றிக் கோப்பை இன்னும் இந்திய அணியிடம் வந்து சேரவில்லை என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெற்றிக்கோப்பை! பாகிஸ்தான் அமைச்சர் மீது புகார்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், இந்தியா வென்ற வெற்றிக் கோப்பை இன்னும் இந்திய அணியிடம் வந்து சேரவில்லை என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா சாம்பியன் ஆனது. எனினும், வெற்றியாளர்களுக்கான கோப்பை இதுவரை முறைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) ஒப்படைக்கப்படவில்லை.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி, ஆசிய கோப்பையை துபாயில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து அபுதாபியில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு மாற்றிவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் துபாயில் உள்ள ACC தலைமை அலுவலகத்திற்குச் சென்ற பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோப்பை குறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், "கோப்பை இங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது. தற்போது அது அபுதாபியில் மோஷின் நக்வியின் நேரடி கட்டுப்பாட்டில் ஏதோ ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மோஷின் நக்வியிடமிருந்து நேரடியாக கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்ததே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. அன்று முதல், கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் நக்வி பல்வேறு நிபந்தனைகளை விதித்து இழுத்தடித்து வருகிறார்.

முன்னதாக, மோஷின் நக்வியின் உத்தரவின் பேரில் கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. தனது அனுமதியின்றி கோப்பையை அங்கிருந்து நகர்த்தக்கூடாது என அவர் அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தற்போது, கோப்பையை முறைப்படி ஒப்படைக்க ஒரு தனி விழாவை நடத்த வேண்டும் என்றும், அதில் இந்திய வீரர்கள் யாராவது நேரில் வந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நக்வி பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிகிறது. ஆனால், பிசிசிஐ தரப்போ, கோப்பையை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

கோப்பை அபுதாபியில் உள்ள ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரும் செய்திகள், இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. விளையாட்டில் அரசியல் கலந்த இந்தச் செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.