மெட்டா மீது வழக்கு: இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் குற்றச்சாட்டில் பெற்றோர் சட்ட நடவடிக்கை

மெட்டா நிறுவனம், சிறுவர் கணக்குகளுக்கான கூடுதல் பாதுகாப்புகள், பெற்றோர் கண்காணிப்பு வசதிகள் உள்ளிட்ட பல மாற்றங்களை Instagram தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மெட்டா மீது வழக்கு: இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் குற்றச்சாட்டில் பெற்றோர் சட்ட நடவடிக்கை

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், இன்ஸ்டாகிராம் தளத்தில் பாலியல் மிரட்டலுக்கு உள்ளான பின்னர் உயிரிழந்த தங்கள் இளம் வயது மகன் தொடர்பாக, அந்த தளத்தின் உரிமை நிறுவனமான Meta மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK) முதல் வழக்கு என்று கருதப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டின் டன்பிளேன் பகுதியைச் சேர்ந்த 16 வயதான முர்ரே டௌவே, டிசெம்பர் 2023 இல் ஆன்லைன் பாலியல் மிரட்டலுக்கு இலக்கானதாக அவரது குடும்பம் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து, முர்ரேயின் பெற்றோர் அமெரிக்க நீதிமன்றத்தில் மெட்டாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறுவனம் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டி, தண்டனைக்குரிய இழப்பீடுகளை அவர்கள் கோருகின்றனர். இந்த வழக்கை Social Media Victims Law Center நிறுவனம், மார்க் மற்றும் ரோஸ் டௌவே சார்பில் தாக்கல் செய்துள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், மேற்கு ஆப்பிரிக்காவில் செயல்படும் மோசடி குழுக்களால் முர்ரே குறிவைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் போலி அடையாளங்கள் மூலம் தொடர்புகொண்டு, பணம் கோரி மிரட்டல் விடுக்கப்பட்டதாக குடும்பத்தின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

முர்ரே உயிரிழப்பதற்கு முன்பே, பாலியல் மிரட்டலைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மெட்டாவுக்கு அறிவு இருந்ததாகவும், ஆனால் நிறுவனம் பாதுகாப்பை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளித்ததாகவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், மெட்டா நிறுவனம், சிறுவர் கணக்குகளுக்கான கூடுதல் பாதுகாப்புகள், பெற்றோர் கண்காணிப்பு வசதிகள் உள்ளிட்ட பல மாற்றங்களை Instagram தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, நைஜீரியாவில் “யாஹூ பாய்ஸ்” என அழைக்கப்படும் குழுக்கள் மூலம் பாலியல் மிரட்டல் ஒரு பெரிய குற்ற வலையமாக மாறியுள்ளமை குறித்து கடந்த ஆண்டு வெளியான விசாரணைகள் கவனம் ஈர்த்திருந்தன.