ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய அணி நிர்வாகம் எடுத்த தவறான தீர்மானம்... முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட கருத்து

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய அணி நிர்வாகம் எடுத்த தவறான தீர்மானம்... முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட கருத்து

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் செய்த செயல் மிகவும் அபத்தமானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

"நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக கே.எல். ராகுல் தான் விளையாட வேண்டும். ஆனால் நேற்று அவர்கள் செய்தது மிகவும் அபத்தமான முடிவு. ராகுல் போன்ற ஒரு திறமையான வீரரை வைத்துக்கொண்டு வேறு எங்கேயோ வீரர்களைத் தேடுகிறார்கள்," என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

கே.எல். ராகுலை விட அக்ஸர் பட்டேல் களத்திற்கு முன்பே சென்று விளையாடியது "கேவலமான விஷயம்" என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். அக்ஸர் பட்டேல் 31 ரன்கள் அடித்தாலும், அவர் நன்றாக விளையாடினாரா இல்லையா என்பதெல்லாம் கேள்வியே கிடையாது என்றும், ராகுல் உங்கள் அணியில் இருக்கும் சிறந்த வீரர், அவர் ஐந்தாவது வீரராகக் களமிறங்குவது சரியில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

ஸ்ரீகாந்த், தான் கேப்டனாக இருந்தால் நிச்சயம் ராகுலை நான்காவது வீரராக விளையாட வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவில் உள்ள கால சூழ்நிலைக்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள கள சூழலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால், ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அளவிலான பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நான்காவது வீரராக அவர் விளையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ராகுல் முன்பே களத்திற்கு வந்திருந்தால் இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருக்கும். நாம் விக்கெட்டுகளையும் இழந்திருக்க மாட்டோம். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பது கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம். ஒருவேளை அது இந்தியாவுக்குச் சாதகமாக மாறி இருக்கலாம், ஆனால் சொல்ல வேண்டுமென்றால் மழை பெய்து நம்மைப் பாதுகாத்தது என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இதேபோன்று நிதீஷ்குமாரை முன்பே அனுப்பாமல் வேறு வீரர்களை அனுப்பியதற்கு, வலது கை இடது கை பேட்ஸ்மேன்கள் தான் களத்தில் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் காரணம் சொல்வதாகவும் ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக ஹர்சித் ராணா விவகாரத்தில் ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்ததற்கு கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கம்பீரை விடாத ஸ்ரீகாந்த் தற்போது மேலும் பல விமர்சனங்களை அடுக்கி இருக்கிறார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.