ஹர்திக்கை குறிவைத்த ரோஹித் ரசிகர்கள்.. அந்த சம்பவம் ஏன் நடந்தது?.. பிசிசிஐ விளக்கம்!

2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஹர்திக்கை குறிவைத்த ரோஹித் ரசிகர்கள்.. அந்த சம்பவம் ஏன் நடந்தது?.. பிசிசிஐ விளக்கம்!

2024 ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரசிகர்களின் கடும் எதிர்ப்பையும், கூச்சலையும் எதிர்கொண்டார். 
இந்த நிலையில், அந்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு ரோகித் சர்மாவின் ரசிகர் பட்டாளமே காரணம் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் பெற்றுக் கொடுத்து, நீண்ட கால கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை திடீரென நீக்கிவிட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இதன் விளைவாக, 2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அண்மையில், ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசிய பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, "ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோகித் சர்மாவின் ரசிகர் பட்டாளத்திற்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அந்த சம்பவங்கள் நடந்தன. 

இதுபோன்ற சமயங்களில் வீரர்களுக்கு மனதளவில் ஆதரவளிக்க பிசிசிஐ அதிகாரிகள் அவர்களைத் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். நாங்கள் ஹர்திக்கிடம் பேசி, கவலைப்பட வேண்டாம் என்று ஊக்கப்படுத்தினோம்," என்று கூறினார்.

"இந்த விஷயத்தில் ரோகித் சர்மா ஒருபோதும் ரசிகர்களைத் தூண்டிவிடவில்லை. ஹர்திக்கும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவர் மிகவும் முதிர்ச்சியுடன் இந்த நிலைமையை கையாண்டார். பின்னர், மும்பை அணி வெற்றிகளைப் பெறத் தொடங்கியதும், அதே ரசிகர்கள் அவரைப் பாராட்டத் தொடங்கினர்" என்றார்.