ஆசியக் கோப்பை 2025: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு – புதிய சர்ச்சை

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். 

ஆசியக் கோப்பை 2025: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு – புதிய சர்ச்சை

2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 
துபாயில் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணி வீரர்கள் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரிடம் இருந்து வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து மோஷின் நக்வி இந்தியாவிற்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைப் பேசியிருந்தார். இந்த அசாதாரணமான சூழ்நிலையில் தான், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாக அவரிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தார்.

இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையே நடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கைகுலுக்க மறுத்தது, இந்திய வீரர்கள் கைகுலுக்குவதைத் தவிர்த்தது, மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது போன்ற சைகைகள் செய்து சீண்டியது போன்றவை இதில் அடங்கும். இந்த விவகாரங்கள் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வரை சென்று, இரு அணியினரும் புகார் அளித்துக் கொண்டனர்.

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால் பரிசளிப்பு விழா நீண்ட நேரம் தாமதமானது. மோஷின் நக்வி கோப்பையை வழங்கினால் தாங்கள் அதனை வாங்க மாட்டோம் என்றும், அவ்வாறு வற்புறுத்தினால் அதற்கு எதிராகப் புகார் அளிப்போம் என்றும் இந்திய அணி நிர்வாகம், ஏ.சி.சி நிர்வாகத்திடம் திட்டவட்டமாகக் கூறியது.

இந்தத் தகவல் மோஷின் நக்விக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு, மேடையில் இருந்த ஆசிய கோப்பை அங்கிருந்து மீண்டும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகுப் பரிசளிப்பு விழா துவங்கியது. ஆட்டநாயகன் விருதை சிறப்பாக ஆடிய திலக் வர்மா வென்றார். 

இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை இன்று பெற்றுக் கொள்ளாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

வரலாற்று வெற்றியைப் பெற்ற போதிலும், பாகிஸ்தான் உடனான அரசியல் சூழல் காரணமாக, இந்திய அணி இறுதிப் போட்டி மேடையில் கோப்பையைத் தனதாக்கிக் கொள்ளாமல் சென்றது. மேலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மேடையில் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கிரிக்கெட் உலகின் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.