தொடர் விவாகரத்துகளால் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி: கோவிலின் அதிரடி முடிவு
இங்கு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் தொடர்ந்து விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதை கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூருவின் அலசூர் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவில், தனது வளாகத்தில் திருமணங்களை இனிமேல் நடத்தப்போவதில்லை என அறிவித்து பக்தர்களிடையே க்ஷாக் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக முகூர்த்த நாட்களில் பல தம்பதிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்ட இக்கோவில், தற்போது திருமணச் சடங்குகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்குக் காரணமாக, இங்கு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் தொடர்ந்து விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதை கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்விவாகரத்து வழக்குகளின் போது, திருமணம் செய்த ஆவணங்களை மீண்டும் மீண்டும் கோரி நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு வருவதால் நிர்வாகத்திற்கு தொந்தரவு ஏற்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் திருமணத்தை நடத்திய பூசாரிகளையே கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல நேரிடுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளால், சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில், ஒரு பொதுமகன் கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்திற்கு இக்கோவிலில் திருமணம் நடக்க அனுமதிக்கக் கூடாது என கடிதம் அனுப்பிய நிலையில், இந்த முடிவு வெளியாகி சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
