இந்திய அணி செய்த ஒரே ஒரு தவறு.... இருந்தும் பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? இந்திய அணி வெற்றி பெற்றதகான 3 காரணம்!
ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஒன்பது விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் பலம் அதன் பேட்டிங்கில் உள்ள சையும் அயூப், முகமது ஹாரிஸ், பக்கர் சமான் மற்றும் சல்மான் ஆகா ஆகிய நான்கு வீரர்கள்தான். ஆனால் இந்திய அணி வீரர்கள் அவர்களை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக, சையும் அயூப் ஆட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வ பந்திலேயே டக் அவுட் ஆனார். கடந்த போட்டியில் அரை சதம் அடித்த முகமது ஹாரிஸ் இந்த போட்டியில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல் கேப்டன் சல்மான் ஆகா மூன்று ரன்களிலும், அனுபவ வீரர் பக்கர் சமான் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் திணறியது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தான். மும்மூர்த்தி போல் செயல்பட்ட குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மூவரும் இணைந்து 12 ஓவர்கள் வீசினர்.
இதில் குல்தீப் மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டையும் என மொத்தம் ஆறு விக்கெட்டுகளை இந்த ஜோடி கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, 12 ஓவர்களில் வெறும் 60 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பாகிஸ்தான் அணியால் மீண்டும் எழ முடியாத நிலையை உருவாக்கியது.
இதேபோல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ராவும் தனது அனுபவ பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபர்கான், பும்ரா பந்துவீச்சிலேயே தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
ஆனால் பும்ரா, இரண்டு சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பின்பும் தனது உத்வேகத்தை இழக்காமல், நான்கு ஓவர்கள் வீசி வெறும் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தந்தது. இந்த மூன்று காரணங்களால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.
எனினும், கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தது இந்தியா செய்த தவறாகக் கருதப்படுகிறது. அதற்குப் பதில் ஒரு முழு நேர வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங்கை சேர்க்க வேண்டுமென கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
