தமிழகத்தில் 26 புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்! ரூ.46.59 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக இந்திய ரூபாய் 46.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் 2012ஆம் ஆண்டின் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்காகவே இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, விசாரணைகளின் தற்போதைய நிலை மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் தேவை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சட்டத்தின்படி உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயற்பட்டு வருவதாகவும், மேலும் நான்கு நீதிமன்றங்கள் செயற்பாட்டிற்கு வரவுள்ள நிலையில் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக 12 சிறப்பு நீதிமன்றங்களையும், மேலதிகமாக 14 சிறப்பு நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை 26 ஆகும்.

இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் செயற்பாட்டிற்கு வந்த பின்னர், தமிழகத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் 47 பொலிஸ் மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கான நீதித்துறை வசதிகளை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக, பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நீண்டகாலம் நீதிமன்ற விசாரணைகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அரசு எதிர்பார்க்கிறது.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக மேலும் நான்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள்கள் மற்றும் மனமயக்கப் பொருள்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழகத்தில் தற்போது 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா ஒரு புதிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், சென்னையில் மேலதிகமாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கவுள்ளது.

தமிழக அரசின் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நீதிமன்றங்கள் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், போக்சோ வழக்குகளுக்காக 26 நீதிமன்றங்களும், போதைப்பொருள் வழக்குகளுக்காக நான்கு நீதிமன்றங்களும் என 30 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்கான முக்கியமான நீதித்துறை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

எனினும், புதிய நீதிமன்றங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் செயற்பாட்டிற்கு வரும் திகதிகள் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.