சவூதியில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை: விடை தெரியாத முக்கியக் கேள்விகள்!

சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள மசூதி ஒன்றில் புனிதத்தன்மையை மீறி "தகாத" செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஓர் ஆண் மற்றும் பெண்ணுக்கு இஸ்லாமிய தஸீர் சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

புனிதத் தலத்தில் நிகழ்ந்த குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தாலும், அவர்கள் மீதான குறிப்பிட்ட குற்றம், நீதிமன்ற விசாரணை விவரங்கள் அல்லது ஆதாரங்கள் எதையும் பொதுவெளியில் சவூதி அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. 2023 முதல் அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்ததும், சவூதி அதிகாரிகள் பகிர்ந்த கைதிகள் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது; எனினும், அதில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது தொடர்பான குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என பங்களாதேஷ் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்துள்ளார். 

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை சவூதி ஊடகங்கள் வாயிலாகவே தாங்கள் அறிந்ததாக தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைது, நீதிமன்ற விசாரணை மற்றும் தண்டனை நடைமுறைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ள பங்களாதேஷ் அரசு, தீர்ப்பின் நகலை வழங்குமாறும், தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறும் சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

வெளிநாட்டவர் கைது செய்யப்படும்போது தூதரக உதவியைப் பெற வியன்னா உடன்படிக்கை வழிகாட்டினாலும், ஒவ்வொரு சட்ட நடைமுறையையும் பிற நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் சவூதிக்கு இல்லை என்ற சட்ட விவாதங்களும் எழுந்துள்ளன. 30 லட்சத்திற்கும் அதிகமான பங்களாதேஷ் பிரஜைகள் சவூதியில் பணியாற்றி வரும் சூழலில், இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.