நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரைப் பதிவு செய்தது. அதிரடியாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்கள் விளாசி தனது மூன்றாவது டி20 சதத்தைப் பூர்த்தி செய்தார்.
அவருடன் இணைந்து அதிரடி காட்டிய மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இது டி20 வரலாற்றில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்ததோடு, இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு அணியும் பதிவு செய்த அதிகபட்ச சர்வதேச டி20 ஸ்கோராகவும் அமைந்தது.
முன்னதாக ஸ்காட்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த 254 ரன்களும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த 257 ரன்களும் இதன்மூலம் முறியடிக்கப்பட்டன.
இந்திய அணியின் பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டி வீசிய ஒரு ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் 48 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் போது சர்வதேச டி20 அரங்கில் 150 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அர்ஷ்தீப் சிங் எட்டினார்.
தொடர்ந்து 260 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி தோல்வியடைந்த போதிலும், அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணித்தலைவராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
2026-ஆம் ஆண்டில் இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 666 ரன்களை எடுத்துள்ள ஸ்ரேயஸ் ஐயர், 2022-ஆம் ஆண்டில் ரோகித் சர்மா 29 போட்டிகளில் எடுத்திருந்த 656 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
