மசாலா பிக்ஸ் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்திற்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்திற்கு ‘காந்தாரி’ என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ‘யட்சிணி’ என மாற்றம் செய்யப்பட்டு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேரளாவில் உள்ள சோட்டானிக்கரா கோயிலில் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக அப்பகுதி மக்களுடன் நேரடியாகப் பழகி அவர்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து அவர் பயிற்சியும் பெற்றுள்ளார்.
இவருடன் மெட்ரோ சிரிஷ், மறைந்த மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், வினோதினி, பவன், பிரிகிடா சகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மா.தொல்காப்பியன் கதையமைத்துள்ள இப்படத்திற்கு ஜி.தனஞ்செயன் திரைக்கதையும், ஸ்ரீனி செல்வராஜ் வசனமும் எழுதியுள்ளனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் முக்கியப் பின்னணியான 1943 ஆம் ஆண்டு காலகட்டக் காட்சிகளுக்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் மலைக் குகை அரங்கு அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அனைத்துப் படப்பிடிப்புகளும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

