பாரிஸ், ஒக்டோபர் 25: பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சனிக்கிழமை (ஒக்டோபர் 24) நடைபெற்ற போராட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாரிஸ், மார்செய், லியோன், லில், போர்டோ, துலூஸ், மொன்பெலியே மற்றும் நான்ட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு
பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, பெப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 4 இலட்சத்து 10 ஆயிரம் முதல் 8 இலட்சம் வரையிலான மக்கள் பங்கேற்றதாக அதிகாரிகளும் போராட்ட ஏற்பாட்டாளர்களும் வெவ்வேறு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர்.
தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 10 ஆயிரம் முதல் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல்
பாரிஸில் நடைபெற்ற பிரதான ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் கடைசி நேர உத்தரவையடுத்து நகரின் தென்கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் பெரும்பகுதி அமைதியாக நடைபெற்ற போதிலும், மக்கள் கலைந்து செல்லத் தொடங்கிய பின்னர் பொலிஸாருக்கும் சில ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இதன்போது பொலிஸார் கண்ணீர்ப்புகை, தடியடி மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில இளைஞர்கள் மீது பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முகத்தில் காயமடைந்த டேவிட் என்ற போராட்டக்காரர், பொலிஸார் தங்களைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டதுடன் பலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.
எனினும், சுமார் 500 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகரில் மீண்டும் கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தில் பல வர்த்தக நிலையங்கள் தங்களது கண்ணாடி ஜன்னல்களைப் பாதுகாப்புப் பலகைகளால் மூடியிருந்தன.
மேலும், புகழ்பெற்ற லூவர் மற்றும் மியூசே டி'ஓர்சே அருங்காட்சியகங்களும் அன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.
நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு
கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களின்போது அரச கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சுமார் 2,700 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் வன்முறை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் லோரன்ட் நூனெஸ், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வன்முறையையும் அனுமதிக்க முடியாது என எச்சரித்திருந்தார்.
போராட்டங்கள் ஆரம்பமாவதற்கு முன்னரே 135 பேர் கைது செய்யப்பட்டதாகவும், உலோகக் குண்டுகள், பட்டாசுகள், கவண்கள், தற்காலிக ஆயுதங்கள் மற்றும் வாள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பின்னர் பாரிஸில் மட்டும் 65 பேர் கைது செய்யப்பட்டதாக நகர பொலிஸார் அறிவித்தனர்.
நான்ட், லியோன் நகரங்களிலும் பதற்றம்
பிரான்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்ட் நகரில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் தடைகளை மீறி நகர மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.
அவர்களைத் தடுக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கிப் பொருட்களையும் பட்டாசுகளையும் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோன் நகரில் சுமார் 1,000 பேர் திரண்டிருந்த நிலையில், அவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீஸ் நகரிலும் போராட்டக்காரர்களைப் பின்வாங்கச் செய்வதற்கு நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டங்களைத் தடைசெய்வது மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் விமர்சித்துள்ளனர்.
மக்ரோன் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசாங்கம், வன்முறைகளைத் தடுப்பதற்காக நகர மையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.
பாரிஸ் உள்ளிட்ட சில நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த நடவடிக்கைகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான மக்களின் அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த வார வன்முறைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் என மக்ரோன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதேவேளை, தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படாத சில ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் அரசாங்கத்திற்கும் போராட்ட அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி மீண்டும் போராட்டம்
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய போராட்டங்களை நடத்திய மஞ்சள் அங்கி இயக்கத்தினர், மீண்டும் வீதிகளில் இறங்கத் தயாராகி வருகின்றனர்.
போராட்டம் நடத்துவதற்கான சுதந்திரத்தை வலியுறுத்தி ஒக்டோபர் 31ஆம் திகதி புதிய ஆர்ப்பாட்டங்களை நடத்த அந்த இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பாரிஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி அரசியல் தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன், இத்தகைய மக்கள் எதிர்ப்புகள் ஒவ்வொரு வாரமும் தொடரக்கூடும் என எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பதற்றம்
பிரான்ஸில் இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உருவாகியுள்ள மக்கள் எதிர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஜனாதிபதி மக்ரோன், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளின்படி மீண்டும் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார்.
இதற்கிடையில், தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் தலைவரான மரின் லு பென், தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஓர்லியன்ஸ் நகரில் கட்சி மாநாட்டை ஆரம்பித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மக்ரோன் மற்றும் லு பென் ஆகிய இருவருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தீவிர வலதுசாரி அரசியலுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் 11,000 பேர் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், சுமார் 26,000 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள்
பிரான்ஸில் மட்டுமன்றி இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணவீக்கம், கல்வி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சுமைகள் போன்றவை இந்தப் போராட்டங்களின் முக்கிய காரணங்களாகக் காணப்படுகின்றன.
இத்தாலியின் மிலான் நகரில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து 500 இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சனிக்கிழமை இரவு நிலவரப்படி கடந்த வாரத்தை ஒப்பிடும்போது வன்முறைகள் ஓரளவு குறைந்திருந்தாலும், பல நகரங்களில் தொடர்ந்த மோதல்கள் மக்களிடையே நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
மூலச் செய்தி: AFP

