வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மூளையில் கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், அவசர சிகிச்சைக்காகச் சீனாவின் பெய்ஜிங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்கள் மற்றும் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. 

அமெரிக்காவில் உள்ள சீன ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வான்ஜுன் சீ (Wanjun Xie) என்பவர் இத்தகவலைப் பகிர்ந்ததுடன், கிம்மின் மறைவைத் தொடர்ந்து சீனா ஒன்பதாயிரம் படைவீரர்களை வடகொரியத் தலைநகருக்கு அனுப்பியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், கிம் ஜாங் உன் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் வகையிலான புதிய புகைப்படங்களை வெளியிட்டு, இந்த மரண வதந்திகளுக்கு வடகொரிய அரசு ஊடகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அந்நாட்டில் நடைபெற்ற ஆடை மற்றும் காலணிப் பொருட்காட்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டு, ஆடைகள் மற்றும் காலணிகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1948 ஆம் ஆண்டு முதல் குடும்பப் பரம்பரை ஆட்சியாக வடகொரியாவை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிம் வம்சத்தில், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான சர்வாதிகார நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார்.

முன்னதாக, தனது அதிகாரத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட உறவினர்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் 2017 ஆம் ஆண்டு அவரது மூத்த சகோதரர் கிம் ஜாங் நாம் நச்சுவாயு மூலம் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.