ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியின் பந்துவீச்சில் 134 ரன்களில் சுருண்டது உத்தரகாண்ட்

இந்தியாவில் 92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.

முந்தைய நாள் இரவு பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக காணப்பட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி, தமிழகத்தின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 56.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அவ்னீஷ் சுதா 54 ரன்களும், மயங்க் மிஷ்ரா 33 ரன்களும், லக்ஷயா ராய்சந்தனி 15 ரன்களும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் மற்றும் கேப்டன் சாய் கிஷோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. விமல் குமார் ரன் ஏதுமின்றியும், என்.ஜெகதீசன் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் 37 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மற்றொரு போட்டியில், சத்தீஷ்காருக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தொடருக்கு தயாராகும் நோக்கில் களமிறங்கிய சுப்மன் கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் உதய் சஹாரன் 106 ரன்கள் குவித்து சதம் அடித்தார்.

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த பிரியான்ஷ் ஆர்யா 199 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். கேப்டன் ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் சேர்த்துள்ளார்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் இமாசலபிரதேச அணி 140 ரன்களில் ஆட்டமிழந்தது. மும்பை தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. மற்றொரு போட்டியில் கர்நாடகா 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் சேர்த்துள்ளது. மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் புதுச்சேரி அணி 177 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மத்திய பிரதேசம் 2 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.