இத்தாலியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி மிலன், போலோக்னோ, பிரெஸ்சியா, பெர்கமோ மற்றும் டூரின் ஆகிய நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதில் மிலன் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடைகள் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தினர். பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தச் செயல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
India Today
இத்தாலியில் பயிலும் மற்றும் தங்கியிருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் சூழலைக் கவனித்து நடக்குமாறும் கூறப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு ரோம் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தையோ அல்லது மிலனில் செயல்படும் துணைத் தூதரகத்தையோ தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை ஒடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 20,000 யூரோ வரை அபராதமும் விதிக்கப்படலாம். முகத்தை மறைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை மேலும் அதிகரிக்கப்படும்.
குறிப்பாக, இதில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோரே சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் அபராதத்தையும் செலுத்த வேண்டும் என்று சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனச் சந்தேகம் எழுந்தால் அவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
India Today
பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது புரட்சியல்ல, அது குற்றச்செயல் என்று தெளிவுபடுத்தியுள்ள அரசு, மிலன் நகரின் பாதுகாப்பிற்காக 2026 ஆம் ஆண்டு இறுதி வரை 500 கூடுதல் ராணுவ வீரர்களைக் களமிறக்கியுள்ளது. தெற்கு இத்தாலியில் டீசல் விலை உயர்வால் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள நிலையில், பொருளாதாரக் காரணங்களை வன்முறைக்கு ஒரு நியாயமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.

