வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை அண்மித்த கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (26) புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், நாளை (27) மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் தீவிர புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயல் இலங்கையை நேரடியாகத் தாக்கும் என எதிர்பார்க்கப்படாத போதிலும், அதன் தாக்கத்தினால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

